நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்ட மாநகராட்சி ஆணையர் - ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்த ஐகோர்ட்டு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை மாநகராட்சியின் 5-வது மண்டலத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், சென்னையை சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 5-வது மண்டலமான ராயபுரத்தில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதேபோல பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வில் 2 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உத்தரவை அமல்படுத்தாததற்காக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அந்த தொகையை ஆணையரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து, அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி ஆணையர் குமரகுருபரன் நேரில் ஆஜரானார். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், நீதிமன்ற உத்தரவை மாநகராட்சி ஆணையர் வேண்டுமென்றே மீறவில்லை என்றும், நடந்த தவறுக்கு முழுப் பொறுப்பு ஏற்பதாக ஆணையர் கூறியிருப்பதாகவும் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை திரும்பப் பெறுவதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com