குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் வன்கொடுமைகளும் தொடர்கதையாகி வருவது வேதனையளிக்கிறது - டி.டி.வி. தினகரன்

பாலின சமத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூக வாழ்க்கையில் மகளிர் விரும்பும் மாற்றத்தை கொண்டு வர உறுதியேற்போம் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து இருப்பதாவது:-

"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று முழங்கிய மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு உதாரணமாக திகழும் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண் சிசுக் கொலையை தடுத்திட தொட்டில் குழந்தை திட்டம், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட மகளிர் சுய உதவிக்குழுக்கள், பெண்கள் பாதுகாப்பிற்காக மகளிர் காவல்நிலையங்கள் என மகளிர் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இந்நாளில் நினைவுகூற கடமைப்பட்டுள்ளேன்.

பெண்கள் பெற்ற உரிமைகளை பேணிக்காக்கவும், பெற வேண்டிய உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய இன்றைய சமுதாயத்திலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பளங்களும் வன்கொடுமைகளும் தொடர்கதையாகி வருவது வேதனையளிக்கிறது.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் வகுத்துக் கொடுத்த சமதர்ம கொள்கையின்படி பெண்களின் முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சி என்பதை உணர்ந்து, பாலின சமத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூக வாழ்க்கையில் மகளிர் விரும்பும் மாற்றத்தை கொண்டு வர இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com