பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்டு 15-ந்தேதி வரை அவகாசம் நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு

நாட்டின் உயரிய பத்ம விருதுகளை பெற தகுதியான, மற்றவர்களுக்காக பரிந்துரைகளும் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்டு 15-ந்தேதி வரை அவகாசம் நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கும், அளப்பரிய சாதனைகள் செய்தவர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும்.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இனம், தொழில், பதவி, பாலின வேறுபாடின்றி அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த நிலையில் 2026-ம் ஆண்டுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த மார்ச்சில் தொடங்கியது. ஜூலை 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. தேசிய விருதுகள் இணையதளமான https://awards.gov.in என்ற தளத்தில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.

இந்நிலையில், பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்டு 15-ந்தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனை மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இது தொடர்பான விரிவான விவரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளமான https://mha.gov.in மற்றும் பத்ம விருதுகளுக்கான இணைய தளமான https://padmaawards.gov.in என்ற தளத்திலும் உள்ளன. விருதுகள் தொடர்பான விதிகள் இணையதளத்தில் https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளன.

இதேபோன்று, ராஷ்டிரீய புரஸ்கார் வலைத்தளத்தில் உள்ள படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, 800 வார்த்தைகளுக்கு மிகாமல் பாராட்டு பத்திரமும் எழுதி, ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். மற்றவர்களுக்காக பரிந்துரைகளும் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல்களை உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com