

ராமேசுவரம்,
பிரிக்ஸ் மாநாட்டில் ராமேசுவரம் கோவிலின் பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரத்தை பிரதமர் மோடி இடம்பெற செய்ததன் எதிரொலியாக அங்குள்ள தூண்களை காண வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக ராமேசுவரம் ராம நாதசாமி கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் உலக அளவில் பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரம் அமைந்துள்ளது. கி.பி. 1740-1770-ம் ஆண்டுகளுக்குள் ராமநாதபுரம் சீமையை ஆண்ட முத்துராமலிங்க சேதுபதி மன்னரால் இந்த பிரகாரம் கட்டப்பட்டது. ஒரே மாதிரியான 1,212 தூண்கள் கொண்டு இந்த பிரகாரம் கட்டப்பட்டுள்ளது.
இதுவே இந்த பிரகாரத்தின் சிறப்பு அம்சமாகும். ராமேசுவரம் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் மிகவும் நீளமான ஒரே மாதிரியான தூண்களை கொண்ட இந்த 3-ம் பிரகாரத்தின் அழகை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட ரஷியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அதிபர்களை வரவேற்ற இடத்தின் பின்னணியில் ராமேசுவரம் கோவிலின் 3-ம் பிரகாரத்தின் படங்கள் இடம் பெற்றிருந்தது. அதேபோல் 3-ம் பிரகாரத்தின் சிறப்புகள் குறித்து பிரதமர் மோடி உலக நாடுகளின் அதிபர்களிடம் விளக்கி கூறினார்.
இது இந்திய அளவில் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு வந்து கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரத்தை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். தரிசனம் முடித்து அம்பாள் சன்னதியில் இருந்து வெளியே வரும் பக்தர்கள் 3-ம் பிரகாரத்தை பார்த்து ரசித்தபடி செல்கின்றனர். ராமேசுவரம் கோவிலின் சிறப்புகளை வெளிக்கொண்டு வந்த பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் ராமேசுவரம் பகுதி பொதுமக்கள், சுற்றுலா ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.