மேகதாது அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததா? கர்நாடக முதல்வரின் பேச்சுக்கு வைகோ கண்டனம்!

மத்திய பாஜக அரசு, கர்நாடக மாநிலத்திற்கு மேகதாது அணை கட்ட ஒப்புதல் அளிக்கக் கூடாது என வைகோ தெரிவித்துள்ளார்.
வைகோ
Published on: 

சென்னை,

மேகதாது அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துவிட்டதால் மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக முதல்-மந்திரியின் பேச்சுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கர்நாடக மாநிலம், மைசூருவில் காஸ்மோஸ் கோளரங்கத்தை பிரதமர் மோடி நேற்று (நவம்பர் 13) திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அம்மாநில முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் பேசும்போது,

டி.கே.சிவகுமார் பேச்சு

"மேகதாது அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு, தெளிவான தீர்ப்பை அளித்து விட்டது. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்பட்டே தீரும். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. சட்ட ரீதியாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல்களை மத்திய அரசு தரவேண்டும். இந்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம். அனைத்துத் தரப்பும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு கர்நாடகாவுக்கு உதவ வேண்டும்” என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.

வைகோ கண்டனம்

மேகதாது அணை கட்டுவதற்கு, சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து விட்டதாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் மீண்டும் மீண்டும் கட்டவிழ்த்து விடும் கட்டுக்கதை கடும் கண்டனத்திற்குரியது. கடந்த நவம்பர் 9ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில் சுப்ரீம் கோர்ட்டு 2018 பிப்ரவரி 16ஆம் தேதி வழங்கிய தீர்ப்பை மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில் எந்த இடத்திலும் கர்நாடகா அணைக்கட்டிக் கொள்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்,

The upper riparian State shall not take any action so as to affect the scheduled deliveries of water to the lower riparian States. மேல்பகுதி (Upper Riparian) மாநிலம், கீழ்ப்பகுதி மாநிலங்களுக்கு அட்டவணைப்படி வழங்க வேண்டிய நீர்வரத்தைப் பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது." கீழ்பகுதி மாநிலம் (Lower Riparian), அதாவது தமிழ்நாடுப் பெற்று வரும் காவிரி நீர் வரத்தைத் தடுக்கும் வகையில் மேல்பகுதி மாநிலமான கர்நாடகம் தடுப்பணைகளை அமைக்க கூடாது" என்று உறுதிபட தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், மத்திய பாஜக அரசின் அனுமதியை வஞ்சகமான முறையில் பெற்று மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் முனைந்து இருப்பது அடாவடித்தனமான, சட்டத்தை மீறிய செயலாகும்.

கடுமையான அழுத்தம்

மத்திய பாஜக அரசு, கர்நாடக மாநிலத்திற்கு மேகதாது அணை கட்ட ஒப்புதல் அளிக்கக் கூடாது. தமிழ்நாடு அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை விரைவு படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்து கர்நாடக மாநில அரசின் முயற்சியை முறியடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X