விநாயகர் சிலை வைத்திருந்த இடத்தில் தகராறு: தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை - 7 பேர் கைது

விநாயகர் சிலை வைத்திருந்த இடத்தில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் கொண்டு 7 பேர் கொண்ட கும்பல் தொழிலாளியை வெட்டிக்கொலை செய்தது.
விநாயகர் சிலை வைத்திருந்த இடத்தில் தகராறு: தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை - 7 பேர் கைது
Published on

பம்மல் நாகல்கேணி காந்தி நகரை சேர்ந்தவர் நாகு என்கிற ஞானசம்பந்தன் (வயது 46). இவரது சகோதரர் சரவணன் (56). இருவரும் சாலையோரம் தங்கி கூலிவேலை செய்து வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நாகல்கேணி அண்ணா தெருவில் உள்ள காலி இடத்தில் ஒன்றாக மது அருந்தினர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், அவர்களிடம் தகராறு செய்த நிலையில் சகோதரர்கள் இருவரையும், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் படுகாயமடைந்த நாகு, சம்பவ இடத்திலேயே இறந்தார். சரவணன் படுகாயமடைந்தார். இதையடுத்து போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சரவணனுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பம்மல், பூம்புகார் நகரில் கடந்த 3-ந் தேதியன்று விநாயகர் சிலை வைத்திருந்த இடத்தில் ரேடியோவில் அதிக ஒலி உள்ளதாக கூறி நாகு சகோதரர்கள் விழா நடத்தியவர்களிடம் தகராறு செய்துள்ளனர்.

அப்போது ராஜேஷ்குமார் என்பவருக்கும், நாகு சகோதரர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது ராஜேஷிடம், கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் நேற்று முன்தினம் இரவு, நண்பர்கள் 6 பேருடன் சென்று ராஜேஷ்குமார் நாகு மற்றும் சரவணன் ஆகியோரை வெட்டி கொன்றது தெரியவந்தது. இது தொடர்பாக, சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பம்மல் பூம்புகார் நகரை சேர்ந்த லாரி டிரைவர் ராஜேஷ்குமார் (34) உள்பட 7 பேரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com