

திண்டுக்கல்,
விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா, ராமகிரி அடுத்த பொம்ம நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பொம்மன் (வயது 47). விவசாயியான இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். 2 மனைவிகள் திண்டுக்கல் மாவட்டம் பொம்ம நாயக்கன் பட்டியில் வசித்து வருகின்றனர். 3-வது மனைவி கரூர் மாவட்டம் மூக்கணாங்குறிச்சியை அடுத்த கருவாடு நாயக்கனூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பொம்மனின் சொந்த ஊரான பொம்ம நாயக்கன்பட்டியில் விநாயகர் சிலை வைப்பதில் அங்குள்ள சிலருக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
பின்னர் பொம்மன் நள்ளிரவு 1 மணிக்கு குஜிலியம்பாறையில் இருந்து புறப்பட்டு மூக்கணாங்குறிச்சியை அடுத்த கருவாடு நாயக்கனூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். ஆனால் அவர் 3-வது மனைவியின் வீட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் முஷ்டகிணத்துபட்டி சாலையில் பொம்மன் உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு, காயங்களுடன் இறந்து கிடப்பதாக அவரது குடும்பத்தினர் மற்றும் வெள்ளியணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொம்மனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பொம்மனை கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.