

சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்காக, பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான சிறப்புச் செயல் திட்ட நிதியிலிருந்து சுமார் 6 கோடி ரூபாயைப் பயன்படுத்துவதாக அரசு வெளியிட்ட அரசாணை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் இன்றளவும் தரமான கல்வி, குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைக்காத நிலையில், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றம் செய்வது அவர்களின் முன்னேற்றத்தை மேலும் தாமதப்படுத்தும் செயலாகும்.
காலை உணவுத் திட்டம் மாணவர்களின் நலனை மேம்படுத்தும் மிக முக்கியமான திட்டம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்கிறோம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றுவது சமூக அநீதியின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களின் வறுமையை ஒழிக்கவும் ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றும் முடிவை உடனடியாகக் கைவிட்டு, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான நிதியை தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலமாகவே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.