கொரோனா 2-வது அலையில் இருந்து மக்களை காப்பாற்ற தி.மு.க. வேட்பாளர்கள் கபசுர குடிநீர் வழங்கும் பணியில் ஈடுபட வேண்டும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கொரோனா 2-வது அலையில் இருந்து மக்களை காப்பாற்ற தி.மு.க. வேட்பாளர்கள் கபசுர குடிநீர் வழங்கும் பணியில் முழு மூச்சாக ஈடுபட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா 2-வது அலையில் இருந்து மக்களை காப்பாற்ற தி.மு.க. வேட்பாளர்கள் கபசுர குடிநீர் வழங்கும் பணியில் ஈடுபட வேண்டும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக தி.மு.க. நிர்வாகிகள் தீவிர களப்பணியாற்ற வேண்டும் என கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.

அந்தவகையில் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் பணிகளை மேற்கொள்ள தி.மு.க. வேட்பாளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றின் முதலாவது அலையின் போது ஒன்றிணைவோம் வா என்ற மாபெரும் மக்கள் இயக்கம் மூலம் மனித நேயப் பணிகளை ஆற்றினோம். அதன் அடிப்படையில், தற்போது இரண்டாவது அலை தொடங்கியவுடனும் தி.மு.க.வினர் அனைவரும் பணியாற்றிட வேண்டும் என ஏற்கனவே கேட்டுக்கொண்டதன் பேரில் மாநிலம் முழுவதும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கபசுர குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதை நானறிவேன்.

அதேநேரம் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட்டோர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக இப்பணியில் ஈடுபட முடியாத நிலை இருந்தது. ஆகவே, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி மூலம் தேர்தல் ஆணையத்திடம் இதற்கு தி.மு.க.வின் சார்பில் அனுமதி கோரப்பட்டது.

தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று கொரோனா தடுப்பு பணியின் ஓர் அங்கமாக கபசுர குடிநீர் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட ஆட்சேபனை இல்லையென தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது. எனவே தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும், வேட்பாளர்களாக இருக்கும் மாவட்ட செயலாளர்களும் கபசுர குடிநீர் வழங்கும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டு கொரோனா இரண்டாவது அலையில் இருந்து மக்களைக் காப்பாற்றிடத் தீவிரப் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அவ்வாறு கபசுர குடிநீர் வழங்கும் போது அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடம் உள்ளிட்ட விவரங்களைச் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் உரிய வகையில் தெரிவித்து அரசு அறிவுறுத்தியுள்ள தனிமனித இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடித்து பொது மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com