

திருச்செந்தூர்
தமிழக முதல்-அமைச்சர் விஜய் பற்றி அவதூறு பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடந்த மாதம் 20-ந்தேதி நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் மற்றும் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், தமிழக முதல்-அமைச்சர், சினிமா நடிகைகளோடு ஜாலியாக இருந்தார். அவரை கொண்டு வந்து சட்டசபையில் உட்கார வைத்த உடன் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார் என்று அவதூறு பேசியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக த.வெ.க. கட்சி நிர்வாகிகள் ஆத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மீது பி.என்.எஸ். 352 மற்றும் 353/2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, முன் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை அவர் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, எஸ்.பி. அலுவலகத்தில் அவரிடம் 5 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின்னர் அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி போலீசார் நெருக்கடி தருகிறார்கள். த.வெ.க.வில் சேரச்சொல்லி என்னை போலீசார் நிர்பந்திக்கிறார்கள். நான் ஒத்துக்கொள்ளவில்லை. நான் ராஜினாமா செய்ய மாட்டேன். தி.மு.க.வில் உறுதியாக இருப்பேன். விஜய்யை மட்டுமல்ல, யாரையும் எதிர்ப்போம். காவல்துறை அராஜகம் செய்கிறது என கூறினார்.
இந்த சூழலில், தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம், மாஜிஸ்திரேட் ஒன்றரை மணிநேரம் விசாரணை நடத்தினார்.
இதனை தொடர்ந்து, அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். ரூ.10 ஆயிரம் செலுத்தி விட்டு சொந்த ஜாமீனில் செல்லும்படி உத்தரவிட்ட அவர், 10 நாட்களுக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.