

சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காகவும், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி மூலமாகவோ நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அந்த அடிப்படையில் திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய், நிவாரண நிதி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் ஒரு மாத சம்பளத்தை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என தமிழக முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.