

சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாத ஓய்வூதியம் மற்றும் உதவித் தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியாக வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 322-வது வாக்குறுதியான முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை ஆட்சி நிறைவடையும் தறுவாயிலும் நிறைவேற்றாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு, தற்போது சிறப்பு நிதி எனும் பெயரில் 2,000 ரூபாய் வழங்கியிருப்பது முழுக்க முழுக்க ஏமாற்று வேலையே ஆகும்.
அண்டை மாநிலங்களைப் போல மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என ஜனநாயக ரீதியில் போராடிய மாற்றுத்திறனாளிகளின் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறைக்கு உள்ளாக்கிய திமுக அரசு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம், மக்கள் நலனுக்கான நிரந்தர தீர்வை எட்டுவதை விட்டுவிட்டு அவர்களை வெறும் தேர்தல் நேர வாக்குவங்கியாக மட்டுமே பார்ப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
எனவே, கடந்த ஐந்தாண்டு கால இருண்ட ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களையும் வாட்டி வதைத்துவிட்டு தற்போது திடீர் பாதுகாவலர் வேஷம் போடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இதுபோன்ற தேர்தல்கால சித்து விளையாட்டுகளை நம்பி தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதோடு, வரும் தேர்தலில் திமுவை வீட்டிற்கு அனுப்பும் முடிவிலிருந்து துளியளவும் பின்வாங்க மாட்டார்கள் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.