த.வெ.க.வை ஆதரிக்கிறதா காங்கிரஸ்? - பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும் அறிவிப்பு

த.வெ.க. வெளிப்படையாக எந்த கட்சியிடமும் ஆதரவு கோரவில்லை என்றாலும், பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.
த.வெ.க.வை ஆதரிக்கிறதா காங்கிரஸ்? - பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் த.வெ.க. அதிகபட்சமாக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும், தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் த.வெ.க.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார்.

அதன்படி, விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று, கவர்னர் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால் 108 என்ற எண்ணிக்கையுடன் அதைச் சாத்தியப்படுத்துவது கடினம். மேலும், சட்டசபையில் த.வெ.க.வைச் சேர்ந்த ஒருவர் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டு, அவரின் மூலம் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பெரும்பான்மை வாக்கெடுப்பும் நடைபெறும்.

இதில் சபாநாயகருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. மேலும், த.வெ.க. தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒன்றை மட்டும் வைத்துக்கொள்ள முடியும்; இதனால் ஒரு தொகுதியை த.வெ.க. இழக்கும். எனவே த.வெ.க.வுக்கு சட்டசபையில் 106 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கும். பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும்.

தனித்து போட்டியிட்டதால் த.வெ.க.வுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை. எனவே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவளித்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும் என்று சூழல் நிலவியது. த.வெ.க. வெளிப்படையாக எந்த கட்சியிடமும் ஆதரவு கோரவில்லை என்றாலும், பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.

இந்த சூழலில் ஆட்சி அமைக்க காங்கிரஸிடம் தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் சென்னையில் இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் கூடியது. முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து மாநில காங்கிரஸ் கமிட்டியே முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இதனிடையே தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முடிவை இன்று காலை 11 மணிக்கு அறிவிப்பதாக கிரிஷ் சோடங்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் நிர்வாகி வருகை தாமதத்தால் சென்னையில் நடைபெற இருந்த காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக அண்ணாசாலை அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்தது. தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்க கிரிஷ் சோடங்கள் சென்னை வந்துள்ளார்.

இந்த சூழலில் காங்கிரஸ் செயலாளார் சூரஜ் ஹெக்டோ வருகை தாமதமானதால் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் தாமதமாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்வான 5 எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com