

சென்னை,
தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அதில் தொகுதி மறுவரையறைக்கான அரசியல் சாசன திருத்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. இந்த மசோதா நிறைவேறுவதற்கு 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இதனால் இந்த மசோதாவுக்கு இந்தியா கூட்டணியில் இருந்து விலகி இருக்கும் தி.மு.க. (22 எம்.பி.க்கள்) மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் (8), ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் (4) கட்சிகளின் ஆதரவு இந்த முறை ஆளும் கூட்டணிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது திமுக தான். நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:
• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது.
• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது.
எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.
பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.