

சென்னை,
தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (20 வயது). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கிறது. இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த இவர் மணலி பகுதியில் தலைமறைவாக தங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து திரிசூலம் அருகே அவரது நண்பர் மணி என்பவரின் குடிசை வீட்டில் ஆறுமுகமும் அவரது நண்பர் சதிஷ்(17வயது) என்பவரும் ஒன்றாக தங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை 8 பேர் கொண்ட கும்பல் சதிஷ் மற்றும் அவரது நண்பர் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து அவர்களை சரமாரியாக வெட்டி கொன்று விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் திரிசூலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரனையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்தது தெரிய வந்திருக்கிறது. இவர்கள் இருவரின் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதன் காரணமாக எந்த குற்ற வழக்கின் காரணமாக இந்த கொலை நடந்தது என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இந்த வீட்டில் நான்கு பேர், ஐந்து பேர் என கும்பல் கும்பலாக தங்கியிருந்து போதை பொருட்கள் பயன்படுத்தி வந்ததாக அப்பகுதி பொதுமக்கள் போலீசிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவரின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கபபட்டுள்ளது. அவர் யார் என அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சுங்குவார் சத்திரம் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் என்பவரை கொலை செய்த வழக்கும், தீர்த்தங்கரை போலீஸ் நிலையத்தில் ஒரு அடிதடி வழக்கும் கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.