உலக அரங்கில் ஏற்றுமதி சந்தையில் முன்னேறும் முருங்கை, மிளகாய்

முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் மதுரையில் செயல்பட்டு வருகிறது.
உலக அரங்கில் ஏற்றுமதி சந்தையில் முன்னேறும் முருங்கை, மிளகாய்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் இருந்து முருங்கைக்காய் ஏற்றுமதியை அதிகரிக்கவும், ஏற்றுமதிக்கான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் முன்னோடி திட்டமாக, வேளாண் நிதிநிலை அறிவிப்பு 2021-22 ன் படி, “முருங்கை ஏற்றுமதி மண்டலம்” அறிவிக்கை செய்யப்பட்டு, ஒன்பது மாவட்டங்களுடன் கூடிய இம்மண்டலத்தில் ஏற்றுமதிக்கான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த “முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம்” மதுரையில் செயல்பட்டு வருகிறது.

இம்மையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் “தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் ” நிர்வாகக் கட்டுப்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலக அரங்கில் ஏற்றுமதி சந்தையில் உலர் முருங்கை இலைப்பொருட்கள் மற்றும் மிளகாய்க்கான தேவை அதிகரித்து வருகிறது.

அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் தமிழகத்தில் இருந்து உலர் முருங்கை இலைப்பொருட்கள் மற்றும் மிளகாய் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், நேரடியாக சந்தைப்படுத்தி, விவசாய பெருமக்களின் வருமானத்தை அதிகரிக்கவும், பல ஏற்றுமதி நிறுவனங்களுடன், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் தமிழ்நாடு, முருங்கை மற்றும் மிளகாய் ஏற்றுமதியில் சிறந்த பங்களிப்பு வழங்க இயலும்.

அதன் தொடர்ச்சியாக, 27.02.2026 அன்று சென்னை தலைமை செயலகத்தில் மூன்று தனியார் நிறுவனங்களுடன், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் உலர் முருங்கை மற்றும் மிளகாய் ஏற்றுமதி வர்த்தகத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்மூலம் சுமார் 1,150 மெட்ரிக் டன்கள் உலர் முருங்கை இலைகள் மற்றும் 700 மெட்ரிக் டன்கள் மிளகாய் ஆகியவை விவசாய பெருமக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவற்றுள் அங்கக முறை சாகுபடி உலர் முருங்கை இலைகள் சுமார் 900 மெட்ரிக் டன்கள் மற்றும் இரசாயன முறை சாகுபடி உலர் முருங்கை இலைகள் சுமார் 250 மெட்ரிக் டன்களும் அடங்கும். இத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 800 ஏக்கர் பரப்பிற்கு, ஏற்றுமதிக்கான முருங்கை இலை சாகுபடியினையும், 1,000 ஏக்கர் பரப்பிற்கு மிளகாய் சாகுபடியினையும் உறுதிசெய்ய வழிவகை செய்துள்ளது.

கூடுதலாக இந்நிகழ்வில், பல்வேறு உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் மற்றும் விவசாய பெருமக்கள் மூலம் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட முருங்கை இலைச்சாகுபடி பரப்பிற்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்களுடன் உலர் முருங்கை இலைகள் நேரடி கொள்முதலுக்கான முத்தரப்பு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. இச்சந்தைப்பிணைப்பு வாங்குவோர்-விற்போர் இடையே சுமூகமான உறவை தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் உறுதிசெய்யும்.

மேற்கண்ட முத்தரப்பு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் சுமார் ரூ.12 கோடி அளவில் முருங்கை ஏற்றுமதி வர்த்தகம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த வேளாண் விளைபொருட்களை உறுதிசெய்ய, முருங்கை சாகுபடி தொழில்நுட்பம், பயிர் மேலாண்மை, உர நிர்வாகம் மற்றும் பதப்படுத்தும் நெறிமுறைகள் ஆகிய சேவைகள் வழங்குவதன் மூலம் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் தொடர்ந்து வழிகாட்டும்.

எனவே, ஏற்றுமதி வர்த்தகத்தில் இயற்கை முறை உலர் முருங்கை இலைகள் மற்றும் மிளகாய் தேவை அதிகமுள்ளதால், விவசாய பெருமக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் சந்தைப்பிணைப்பினை பயன்படுத்தி, ஏற்றுமதி சந்தையில் நேரடியாக பங்குகொண்டு பயன்பெற தமிழக அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், தொடர்பிற்கு md.tnapex@tn.gov.in, mefcmdu.tnapex@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com