டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்


டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
x
தினத்தந்தி 20 May 2025 2:51 PM IST (Updated: 20 May 2025 6:00 PM IST)
t-max-icont-min-icon

அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் அதிகாரியிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

சென்னை,

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக ஏற்கனவே நடத்திய சோதனை அடிப்படையில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து சமீபத்தில், டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 நாட்கள் சோதனை நடத்தினார்கள்.

தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்தும் விசாகனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல, சினிமா பட அதிபர் ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் வீடு உள்பட மேலும் 7 இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

இந்த நிலையில், நேற்று டாஸ்மாக் நிறுவனத்தின் துணை பொதுமேலாளர் ஜோதி சங்கர் என்பவரை அழைத்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜோதி சங்கரிடம் காலையில் இருந்து மாலை வரை விசாரணை நடத்தப்பட்டது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை முன்வைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதா, துணை பொது மேலாளர் ஜோதி சங்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. நாளை (புதன்கிழமை) காலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story