சென்னையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை அமலாக்கம்: மாநகராட்சி ஆணையர் தலைமையில் சிறப்பு பணிக்குழு ஆய்வுக்கூட்டம்

1,52,500 துணிப்பைகள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை அமலாக்கம்: மாநகராட்சி ஆணையர் தலைமையில் சிறப்பு பணிக்குழு ஆய்வுக்கூட்டம்
மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன்
Published on: 

சென்னை,

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஒருமுறை பயன்பாட்டு நெகிழிப் பொருட்களின் தடை அமலாக்கத்தை கண்காணிப்பதற்கான சென்னை பகுதி சிறப்புப் பணிக்குழுவின் 3ஆவது ஆய்வுக் கூட்டம் பணிக்குழுவின் தலைவர்/மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், தலைமையில் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவாது;-

3ஆவது ஆய்வுக் கூட்டம்

இன்று (13.10.2026) சென்னை பகுதி சிறப்பு பணிக்குழுவின் தலைவர் மாநகராட்சி ஆணையாளர் சமீரன், தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஒருமுறை பயன்பாட்டு நெகிழி பொருட்களின் தடை அமலாக்கத்தை கண்காணிப்பதற்கான சென்னை பகுதி சிறப்புப் பணிக்குழுவின் 3ஆவது ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், துணை ஆணையாளர் (சுகாதாரம்) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், காவல் இணை ஆணையாளர் (வடக்கு) எம்.மனோகர், பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் / மாவட்ட சுற்றுச்சூழல் பொறி பொறியாளர் (அரும்பாக்கம் சுகந்தி ராணி மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த பணிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசின் அரசாணை (நிலை) எண் 25, நாள் 07.02.2022-ன்படி அமைக்கப்பட்ட இப்பணிக்குழுவில் மாநகராட்சி ஆணையாளர் தலைவராகவும், சென்னை மாநகராட்சியின் சார்பில் துணை ஆணையாளர் (சுகாதாரம்), வட்டார துணை ஆணையாளர்கள், மாநகர நல அலுவலர், மாநகர வருவாய் அலுவலர், மேற்பார்வை பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை), சுகாதாரக் கல்வி அலுவலர், மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோர் உறுப்பினார்கவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் அரும்பாக்கம் மாவட்டசுற்றுச்சூழல் பொறியாளர் ஒருங்கிணைப்பாளராகவும், அம்பத்தூர், வேளச்சேரி மற்றும் மணலி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் உறுப்பினர்களாகவும், சென்னை காவல் துறையில் கூடுதல்/இணை காவல் ஆணையாளர், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வணிக வரித்துறையில் கூடுதல்/இணை ஆணையாளர்கள், மீன்வளத்துறையில் மண்டல இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் இணை இயக்குநர், உயர்கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலர், உணவுப் பாதுகாப்புத்துறை, தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு, தொழில்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

விழிப்புணர்வு நடவடிக்கைகள்

இக்கூட்டத்தில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட 28 வகையான நெகிழி பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க மேற்கொள்ளப்பட்ட அமலாக்க பணிகள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்களிடையே நடத்தப்பட்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள், உறுப்பினர் துறைகள் ஒவ்வொன்றின் பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

ரூ.9.40 கோடி அபராதம் வசூல்

சென்னை மாநகராட்சி சார்பில் 2019 முதல் 08.10.2026 வரை 13.17 லட்சம் வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 499 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விதிமீறிய வணிகர்களிடமிருந்து ரூ.9.40 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,52,500 துணிப்பைகள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்

இக்கூட்டத்தில் ஆணையாளர், அனைத்து உறுப்பினர் துறைகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முனைப்புடன் மேற்கொண்டு, ஒவ்வொரு மாதமும் நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சென்னைக்குள் கொண்டு வரப்படுவதை தடுக்க துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

மாற்று பொருட்கள்

பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, துணிப்பை உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களை பயன்படுத்தி, பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உருவாக்க ஒத்துழைப்பு நல்குமாறு ஆணையாளர் தெரிவித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com