ஈரோடு: இளம்பெண், குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்.. கணவர் ஆடிய நாடகம் அம்பலம்

ஒன்றரை வயது ஆண் குழந்தையும், தாயும் உயிரிழந்த விவகாரத்தில் அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு: இளம்பெண், குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்.. கணவர் ஆடிய நாடகம் அம்பலம்
Published on

ஈரோடு,

ஈரோடு அருகே உள்ள வெள்ளோடு காந்திபுரத்தை சேர்ந்தவர் கவின்குமார் (வயது 32). இவர் பெருந்துறையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அமராவதி (28). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆதிரா என்ற ஆண் குழந்தை இருந்தது.

நேற்று முன்தினம் இரவு குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு தம்பதி இருவரும் தூங்கினர். இந்தநிலையில் நேற்று அதிகாலையில் அருகே தூங்கிக்கொண்டு இருந்த மனைவி அமராவதியை காணாமல் கவின்குமார் திடுக்கிட்டார். சமையல் அறைக்கு சென்றபோது. அங்கு வீட்டின் விட்டத்தில் நைலான் கயிற்றில் தூக்கில் அமராவதி தொங்கிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அவர் அலறினார்.

சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் கவின்குமாரின் தாய், தந்தையும், அக்கம்பக்கத்தினரும் ஓடிவந்தனர். பின்னர் அனைவரும் சேர்ந்து அமராவதியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாசோதனை செய்த டாக்டர்கள் அமராவதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே தொட்டிலில் குழந்தையும் அசைவற்று இருப்பதை கண்டனர். உடனே குழந்தையையும் அதே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தையும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று தாய், மகன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையின் உடலிலோ அல்லது அமராவதியின் உடலிலோ எந்த காயங்களும் இல்லை என்று கூறப்பட்டது. அதனால் அமராவதி தொட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தையின் முகத்தை தலையணையால் அழுத்தி கொன்று இருக்கலாம் என்றும், பின்னர் சமையல் அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் தெரிவித்திருந்தனர்.

கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு எதுவும் இல்லை என்று கூறப்பட்டநிலையில், ஏன் அமராவதி குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்? என்றும், கடன் தொல்லையா? அல்லது அமராவதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் குழந்தையும், தாயும் உயிரிழந்த விவகாரத்தில் அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடிய நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மனைவி, குழந்தையை கொன்றதாக கவின் பிரசாத் வாக்குமூலம் அளித்துள்ளநிலையில், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com