

சென்னை,
சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியுள்ளார். ஏற்கனவே முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இவர்கள் மட்டுமல்ல பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர். மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர மீது சபாநாயகர் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.