

சென்னை,
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் 22.9.2026 அன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (18.9.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பசியின்றி மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்து, கல்வியில் முழுமையான கவனம் செலுத்திடவும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் கடந்த 15.06.2026 அன்று நடைபெற்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தின்போது, காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விரிவாக்கம் செய்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம், 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவியர்கள், கூடுதலாகப் பயன்பெறுவர். இதற்கென நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 217 கோடியே 63 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக 724 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 447 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்தாலும், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள 2,150 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தாலும், ஊரகப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 12,857 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலமாக சுய உதவிக் குழு உறுப்பினர்களால் அந்தந்தப் பள்ளியிலேயே காலை உணவு தயாரித்து வழங்கப்படும்.
மாணவர்களின் உடல் நலம், ஊட்டச்சத்து, பள்ளி வருகை, கற்றல் ஆகிய அம்சங்களை ஒருங்கிணைத்து, பள்ளிக் கல்வியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
இதனை தமிழ்நாடு முதல்-அமைச்சர் 22.9.2026 அன்று சென்னையில் தொடங்கி வைக்கவுள்ளார். தொடக்கப்பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களையும் உள்ளடக்கும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம், மாணவர்களின் கல்விப் பயணத்திற்கும், சமூக முன்னேற்றத்திற்கும் பெரும் துணையாக அமையும்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதல்-அமைச்சர், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை செயல்படுத்திடும் சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்டார். மேலும், மாணாக்கர்கள் அனைவருக்கும் சூடான, சுவையான, உரிய அளவிலான, ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கப்பட வேண்டுமென்றும், இத்திட்டத்திற்காக பணியாற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் முறையாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒருங்கிணைந்து செவ்வனே செய்திட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.