

சென்னை,
பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் வஞ்சித்து வருவதோடு; மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் வருகிற 14-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
2026, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, த.வெ.க. தனது தேர்தல் அறிக்கையில் ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்" என்று அறிவித்திருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசு குறு, சிறு விவசாயிகள் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ.75,000-க்குமேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும், விவசாயிகளை தரம் பிரித்து ஒரு பகுதி கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது. இது, தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முழு வேகத்துடன் முயற்சிகள் மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கப் பார்க்கிறது.
மேற்கண்டவாறு, பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமலும்; மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் த.வெ.க. கூட்டணி அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
த.வெ.க. அரசு சட்டமன்றத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது, விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்த அரசு வெளியிட வேண்டும் என்றும்; அப்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும், ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். இந்நிலையில், த.வெ.க. கூட்டணி அரசு 6.8.2026 அன்று தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில், பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கவில்லை.
எனவே, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு; மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும், காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 14.8.2026 - வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில், தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமையேற்க உள்ளேன். சென்னை மாவட்டம் நீங்கலாக, ஏனைய வருவாய் மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமையேற்போர் பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.
சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
விவசாயிகள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட, கழக அமைப்பு ரீதியான மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒன்றிணைந்து, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களை மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.