விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்! - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

விவசாயிகளுக்கு தற்போதைய அரசு 'அல்வா' கொடுத்து ஏமாற்றியுள்ளது.
முகம்மது முபாரக்
Published on

சென்னை,

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது விவசாயிகளைத் தரம் பிரித்து, விகிதாச்சார அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்திருப்பது ஒட்டுமொத்த விவசாயிகளையும் ஏமாற்றும் செயலாகும். ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி, அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு விகிதாச்சார முறை என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த அறிவிப்பைத் தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் விவசாயிகளைச் சிறு, குறு, பெரு விவசாயிகள் எனத் தரம் பிரிப்பது அநீதியானது. அனைத்து விவசாயிகளும் ஒரே மாதிரியான உற்பத்திச் செலவைத்தான் எதிர்கொள்கின்றனர். எனவே, நிலத்தின் ஏக்கர் கணக்கில் பிரிப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தின் அடிப்படையில் கணக்கிட்டு தள்ளுபடி வழங்க வேண்டும்.

மேலும், தற்போதைய அறிவிப்பால் 2 ஏக்கருக்கு மேல் நெல் பயிரிட்டவர்களும்; கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற தோட்டப் பயிர்களைச் சாகுபடி செய்த விவசாயிகளும் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். கடன் தள்ளுபடிக்கான கால வரம்பை 2025 மே என்று சுருக்காமல், 2024 ஆம் ஆண்டிலிருந்தே கணக்கிட்டு நீட்டிக்க வேண்டும்.

கூட்டுறவு கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற தவெக-வின் வாக்குறுதியை நம்பி வாக்களித்த விவசாயிகளுக்கு, இந்த அறிவிப்பின் மூலம் தற்போதைய அரசு 'அல்வா' கொடுத்து ஏமாற்றியுள்ளது. இதனால் தவெக அரசுக்கு வாக்களித்த விவசாய பெருங்குடி மக்களும், விவசாய அமைப்புகளும் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.

எனவே, தமிழக முதல்-அமைச்சர் இந்த அறிவிப்பை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளின் ஒட்டுமொத்த கடன் தொகையையும் எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com