

பெங்களூரு
கர்நாடகாவில், வேலியை பயிரை மேய்ந்ததுபோன்று வியாபாரிகளிடம் போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது. பெங்களூரு நகரில் மடிவாளா பகுதியில் உள்ள ஓட்டலில் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் தங்கியிருந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த ஓட்டலில் வியாபாரிகள் தங்கியிருந்த அறைக்கு 4 பேர் வந்தனர்.
அவர்கள் தங்களை போலீசார் என கூறியதுடன், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக கூறி வியாபாரிகளிடம் இருந்து ரூ.20 லட்சத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர். அவர்களின் மீது சந்தேகம் அடைந்த வியாபாரிகள், இதுபற்றி மடிவாளா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் கனககிரியின் ஜீப்பில் 4 பேர் வந்ததும், அவர்கள் வியாபாரியை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இந்த கொள்ளையில் தொடர்புடைய உபேந்திரா, குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் மகேஷ் கனககிரியே மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. கேரள வியாபாரிகள் ஓட்டலுக்கு பணத்துடன் வந்ததை அறிந்த மகேஷ் கனககிரி, தனது கூட்டாளிகள் 4 பேரை அனுப்பி அதனை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதற்கிடையே இதுபற்றி அறிந்ததும் மகேஷ் கனககிரி தனது செல்போனை சுவிட்ச்-ஆப் செய்து விட்டு தலைமறைவானார். இதையடுத்து மடிவாளா போலீசார், மகேஷ் கனககிரி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் மடிவாளா போலீசார் நேற்று சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் மகேஷ் கனககிரியை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளிகளான குபேந்திர ரெட்டி, வசந்த் குமார் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.