

சென்னை,
கடந்த (2021) சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 10 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில், அ.தி.மு.க. 179 தொகுதிகளில் போட்டியிட்டது. பா.ம.க. 23 (மாம்பழம்), பா.ஜ.க. 20 (தாமரை) தொகுதிகளில் போட்டியிட்டாலும், ஏனைய கட்சிகள் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையிலேயே போட்டியிட்டன.
அதாவது, த.மா.கா. (6), தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (1), மூவேந்தர் முன்னேற்ற கழகம் (1), அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் (1), பசும்பொன் தேசிய கழகம் (1), பெருந்தலைவர் மக்கள் கட்சி (1), புரட்சி பாரதம் (1) ஆகிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டன. ஆக மொத்தம் 191 பேர் இரட்டை இலை சின்னத்தில் களம் கண்டனர்.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில், பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. புதிய தமிழகம் கட்சியுடனும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தொகுதி பங்கீடு குறித்து விரிவாக பேசப்பட்டது.
மேலும், கூட்டணி கட்சிகள் போட்டியிடுவது தனிச் சின்னத்திலா, அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையிலா, பா.ஜ.க.வின் சின்னமான தாமரையிலா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இறுதியில், அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் அழைப்பின் பேரில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் இன்று டெல்லி சென்றுள்ளனர்.
அவர்கள் இருவரும் அமித்ஷாவை சந்தித்து பேசும்போது, பா.ம.க., அ.ம.மு.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
டெல்லியில் இருந்து வெளியான தகவல்படி, அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. 162 (இரட்டை இலை), பா.ஜ.க. 31 (தாமரை), பா.ம.க. 17 (மாம்பழம்), அ.ம.மு.க. 9 (குக்கர்), த.மா.கா. 4 (தனிச்சின்னம்), இந்திய ஜனநாயக கட்சி 2 (தாமரை), புதிய நீதிக்கட்சி 2 (தாமரை), புதிய தமிழகம் 2 (தாமரை), தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 2 (தாமரை), பார்வர்டு பிளாக் 1 (தாமரை), பெருந்தலைவர் மக்கள் கட்சி 1 (தாமரை), புரட்சி பாரதம் 1 (இரட்டை இலை) ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிகிறது.
அதாவது, இரட்டை இலை சின்னத்தில் 163 பேரும், தாமரை சின்னத்தில் 41 பேரும் களம் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.