

திருப்பத்தூர்,
விநாயகர் சதுர்த்தி விழா பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் 13-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
விநாயகர் சதுர்த்தி
திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. குடைவரை வரை கோவிலான இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான விழா நாளை சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகம் நடைபெற்று காலை 10.45 மணிக்கு மேல் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவையொட்டி 2-வது நாள் முதல் 8-வது நாள் வரை காலையில் வெள்ளி கேடயத்தில் சுவாமி திரு வீதி உலா நிகழ்ச்சியும், முதல் நாள் முதல் 10-ம் நாள் வரை தினந்தோறும் இரவில் சுவாமி மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி மயில் வாகனம், வெள்ளி குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. 6-வது நாளான வருகிற 10-ந்தேதி (வியாழக்கி ழமை) மாலை 5 மணிக்கு மேல் கஜமுக சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
9-ம் நாள் திருவிழாவான வருகிற 13-ந்தேதி மாலை தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் ஆண்டிற்கு ஒரு முறை மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் கற்பகவிநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மறுநாள் (14-ந்தேதி) திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று காலையில் மூலவர் தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் கோவில் திருக்குளத்தில் எழுந்தருளி அங்கு தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மதியம் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும், இரவு பஞ்ச மூர்த்தி சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. மேலும் விநாயகர் சதுர்த்தியையொட்டி தினந்தோறும் மாலை பல்வேறு கலைநிகழ்ச்சிகள், பட்டி மன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதனால் கோவில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.