மலர் கண்காட்சி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் இறுதி கட்ட பணிகள் தீவிரம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியையொட்டி இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மலர் கண்காட்சி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் இறுதி கட்ட பணிகள் தீவிரம்
Published on

நீலகிரி,

சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரிக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவ்வாறு வருபவர்களில், 90 சதவீதம் பேர் ஊட்டிக்கு வருகின்றனர். கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக மலர் கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இந்த மாதம் விரைவில் நடைபெற உள்ள 128-வது மலர் கண்காட்சிக்காக மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணி கடந்த பிப்ரவரி 16-ந்தேதி தொடங்கியது. பின்னர் அவை பூந்தொட்டிகளில் நடப்பட்டு, தற்போது செடிகள் வளர்ந்து பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. இதைத்தொடர்ந்து மலர் மாடத்தில் பூந்தொட்டிகளை அடுக்குதல், புல்வெளி மைதானத்தில் மேடை அமைத்தல், வர்ணம் பூசுதல் உள்பட பல்வேறு இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோடை சீசன் தொடங்கிய நிலையில், மலர் கண்காட்சிக்காக புல்வெளி மைதானம் சீரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாத்திகளில் உள்ள மலர் செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அதேபோல் பூந்தொட்டிகளில் இருக்கும் மலர்கள் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் வகையில் கண்களை கவருகிறது. பூந்தொட்டிகளை அடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து 275 வகையான மலர் விதைகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட விதைகளை கொண்டு 10 லட்சம் மலர் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, பூங்காவில் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்பட்டது. மேலும் மலர் கண்காட்சியின்போது அலங்கார மேடைகளில் காட்சிப்படுத்த 50 ஆயிரம் பூந்தொட்டிகள் தயார் நிலையில் உள்ளது.

புதிய அரசு அமைய வேண்டி இருந்ததால், பல்வேறு நிர்வாக முடிவுகள் எடுக்க தாமதம் ஏற்பட்டது. தற்போது புதிய அரசு பொறுப்பேற்று விட்டதால், மலர் கண்காட்சிக்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த வாரத்தில் மலர் கண்காட்சி தொடங்கப்படும். புதிய மலர் அலங்காரங்கள் இடம்பெறும். இந்த ஆண்டு 2 வாரங்கள் மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com