காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க மரங்களில் பலாப்பழங்களை அகற்றும் வனத்துறை

காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க மரங்களில் உள்ள பலாப்பழங்களை வனத்துறையினர் அகற்றி வருகின்றனர்.
காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க மரங்களில் பலாப்பழங்களை அகற்றும் வனத்துறை
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி, கண்ணம்பள்ளி, நாயக்கன்சோலை, கோரஞ்சால், சேரங்கோடு, படச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு மரங்கள், பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வீடுகளை முற்றுகையிட்டு வருவதுடன், அதனை உடைத்தும் வருகிறது. சில நேரங்களில் வாகனங்களை யானைகள் வழிமறித்து வருகின்றன.

இந்த நிலையில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இதனால் மரங்களில் பலா காய்கள், பழங்கள் காய்த்து தொங்குகின்றன. காட்டு யானைகளுக்கு பலாப்பழங்கள் பிடித்த உணவாகும். பலா மரங்கள் இருக்கும் வீடுகள், தோட்டங்களை நோக்கி காட்டு யானைகள் வரத் தொடங்கி உள்ளன. அவ்வாறு வரும்போது, மனித-வனவிலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதை தடுக்கவும், காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்கவும், அதன் நடமாட்டம் குறித்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுடன் பேசி வீடுகள் மற்றும் தோட்டங்களில் மரங்களில் உள்ள பலாப்பழங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேரம்பாடி வனத்துறையினருக்கு கூடலூர் மாவட்ட வன அலுவலர் தேவராஜ் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி சேரம்பாடி வனச்சரக உதவி வன பாதுகாவலர் ஜிதின்பாபு தலைமையில் வனவர் முத்தமிழ் மற்றும் வனத்துறையினர் வீடு, தோட்ட உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பலா மரங்களில் உள்ள பலா பழங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யாருடைய தோட்டங்களிலாவது பலாப்பழங்களை அகற்ற வேண்டும் என்றால், அதுபற்றி தகவல் தெரிவித்தால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com