

சென்னை,
சென்னையின் பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடியில் கடந்த 3 நாட்களாக நீடித்து வரும் கடுமையான மின்தடையைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடியின் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பகல் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் அடிக்கடி மிக நீண்ட நேரம் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நிலவும் கடுமையான வெயிலின் தாக்கம் மற்றும் நிலவி வரும் உயர் மின்னழுத்த மாறுபாடு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் தூங்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். மேலும், அடிக்கடி ஏற்படும் வோல்டேஜ் மாற்றத்தால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடைவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
மின்சார வாரிய அவசர உதவி எண்களைத் தொடர்பு கொண்டும் முறையான தீர்வு கிடைக்காததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் இன்று (வெள்ளிக்கிழமை) வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாசர்பாடியின் முக்கியச் சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வியாசர்பாடி போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்சார வாரிய அதிகாரிகளிடம் பேசி, பழுதடைந்த கேபிள்கள் மற்றும் மின்மாற்றிகளை உடனடியாக சரிசெய்து தடையின்றி மின்சாரம் வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சென்னையின் வியாசர்பாடி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் இதேபோன்ற கேபிள் பழுதுகள் காரணமாக மின் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாகத் தமிழ்நாட்டு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.