

சென்னை,
தேர்தல் தோல்விக்கு பின்னர் கட்சியில் அதிரடி மாற்றங்களை செய்ய தி.மு.க. தயாராகி வருகிறது. இதுதொடர்பாக வருகிற 22-ந் தேதி நடைபெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்தது. இதையடுத்து தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்தும், கட்சியின் நிர்வாக கட்டமைப்புகளை மாற்றுவது குறித்தும், மாவட்டம் வாரியாக கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் குழு அமைத்து கட்சியில் நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
அவைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, அறிக்கையாக தயாரித்து, கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. அதில் பல்வேறு பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. அதன் அடிப்படையில் கட்சியில் நிர்வாக கட்டமைப்புகளை மறுசீரமைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தி.மு.க.வில் கட்சியில் அமைப்பு ரீதியாக 78 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இதில் சரியாக செயல்படாத சிலரது பதவி பறிக்கப்படலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.
தற்போது இருக்கும் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிய மாவட்ட செயலாளர்களை நியமிப்பது, மாற்று கட்சியில் இருந்து தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு பதவி வழங்குவது தொடர்பாக வருகிற 22-ந்தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பின் தி.மு.க.வில் அதிரடி மாற்றங்களும், அதிரடி நடவடிக்கையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்படி, 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரே பதவியில் மூன்று முறைக்கு மேல் இருப்பவர்களும் மாற்றப்படுவர் என்றும், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளாக 60 வயது வரை இருக்கலாம் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால், முன்னாள் அமைச்சர்களின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, எம்.எல்.ஏ,க்களாக உள்ள சீனியர் மாவட்ட செயலாளர்களுக்கு தலைமை நிர்வாகத்தில் முக்கிய பதவிகள் வழங்கப்பட உள்ளன என்றும், துணை பொதுச்செயலாளர்கள், வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள், அரசியல் விவகாரக்குழு உறுப்பினர்கள் என நியமிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் வாயிலாக 40க்கும் மேற்பட்ட புது முகங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்றும், இது குறித்து வரும் 22ம் தேதி நடக்கும் தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் வருகிற 22-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங் கில் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் தோல்விக்கு பின்னர் நடைபெறக்கூடிய முதல் செயற்குழு கூட்டம் இது என்பதாலும், புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என்பதாலும் கட்சியினர் மத்தியில் இந்த செயற்குழு கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.