

பூந்தமல்லி,
ஆவடி அடுத்த கோவில் பதாகையை சேர்ந்தவர் சசிகலா. அவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக தனது மகன் லோகேஷ் மற்றும் தனது நண்பரும், பொன்னேரிகுப்பம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த பிரபாகரன் (45), அவரது தம்பி மதுழிளி, கழாளி ஆகியோருடன் காரில் சென்றார்.
மேலும், சாமி தரிசனம் முடிந்த பின்னர் அனைவரும் மீண்டும் ஆவடி நோக்கி காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். காரை சசிகலா ஒட்டினார். காரின் முன்பக்க இருக்கையின் பிரபாகரன் அமர்ந்திருந்தார். இன்று காலை குன்றத்தூர் அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வந்தபோது திடீரென கட்டுபாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் பாய்த்து கவிழ்ந்தது.
இதில், காரில் இருந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த ஆசிரியர் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சசிகலா, அவரது மகன் லோகேஷ் மற்றும் பிரபாகரனின் தம்பி மகள்களான மதுழிளி, கழாளி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அவ்வழியே வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பலியான பிரபாகரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தி உள்ளது.