

சென்னை,
உயர்கல்வி நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி நிறுத்தம் என பரவும் தவறான தகவல் குறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது;-
சமூக நீதித்துறையின் கீழ் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி நிறுத்தப்பட்டதாக திமுக நிர்வாகி ஒருவர் பேசியுள்ளார்.
இது முற்றிலும் தவறான தகவலாகும்.
இது தொடர்பாக சமூக நீதித்துறை அளித்துள்ள விளக்கத்தில், "மாணவ - மாணவிகளுக்கு அளிக்கப்படும் IIT, JEE, NEET உள்ளிட்ட 19 வகை உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி நிறுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு 187 பேர் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற நிலையில், நடப்பு ஆண்டில் IITTM - நொய்டா, NIT - ஆந்திரா, NIFT - சென்னை மற்றும் பெங்களூரு, FDDI - சென்னை உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இதுவரை 357 மாணவ - மாணவிகள் சேர்க்கை பெற்றுள்ளனர். இந்த பயிற்சி தொடர்ந்து நடைபெறுவதோடு, அனைத்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவலைப் பரப்பாதீர் !
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.