

சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தான் பார்க்காத உலகத்தையும், தன்னை பார்க்காத உலகத்தையும் தம் குழந்தைகள் கண்டுவிட வேண்டுமென்ற உயர்ந்த லட்சிய வேட்கையுடன் பெற்ற பிள்ளையை தம் தோளில் தூக்கி உயர்த்தி உலகை காட்டும் உன்னத வழிகாட்டிகள்..!
தம் குழந்தைகள் நிம்மதியாக நிமிர்ந்து நடக்க, தான் படும் துயரங்கள் தம் குழந்தைகள் பட்டுவிட கூடாதென்று, கைகளில் காயங்களுடனும் கண்களில் சிரிப்புடனும் தான் குனிந்து, வளைந்து உழைத்து நம் கண் முன்னே நடமாடும் ஒப்பற்ற தெய்வங்கள்..!
கண்டிக்கும் நேரத்தில் காவலனாய்.. கற்பிக்கும் நேரத்தில் ஆசானாய்.. அரவணைக்கும் நேரத்தில் அன்னையாய்.. தவிக்கும் நேரத்தில் தோழனாய்.. ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கையை கற்றுத்தரும் உலகின் முதல் நாயகர்கள்..!
'கண்டிப்பிலும் தண்டிப்பிலும் கொதித்திடும் அவரின் முகம் .. காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் அவரின் முகம் .. தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.. தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே ..! தாலாட்டு பாடும் தாயின் அன்பும் .. தந்தை அன்பின் பின்னே ..!' என்ற என்னுயிர்த் தம்பி நா.முத்துக்குமாரின் உள்ளத்தை நெகிழச்செய்யும் பாடல் வரிகளுக்கு ஏற்ப தம் குழந்தைகளின் வெற்றியையே தன்னுடைய வெற்றியாக கருதி வாழும் நாள் வரை குழந்தைகளை உள்ளத்தில் சுமந்து, குடும்பத்தின் உயர்வுக்காக உழைத்து உழைத்து ஓடாய் தேயும் உன்னத அப்பாக்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த தந்தையர் நாள் நல்வாழ்த்துகள்!