பெண் நோயாளியிடம் 5 பவுன் நகையை பறித்த மருத்துவமனை ஊழியர்.. அதை வாயில் போட்டு விழுங்கியதால் பரபரப்பு

பெண் நோயாளியிடம் மருத்துவமனை ஊழியர் நகையை பறித்து வாயில் போட்டு விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண் நோயாளியிடம் 5 பவுன் நகையை பறித்த மருத்துவமனை ஊழியர்.. அதை வாயில் போட்டு விழுங்கியதால் பரபரப்பு
Published on

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பம்மாள் (வயது 79). இவரது கணவர் இறந்துவிட்டதால், மகன் சங்கர சுப்பிரமணியனின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சுப்பம்மாளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் குடும்பத்தினர், அவரை சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டு சுப்பம்மாள் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 5 பவுன் தங்க சங்கிலியை மருத்துவமனை ஊழியரான நெல்லை குறிச்சி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராமர் (25) என்பவர் பறித்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சுப்பம்மாள் கூச்சலிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராமர் அங்குள்ள கழிவறைக்குள் ஓடிச் சென்றார். எனினும் அங்கிருந்த ஊழியர்கள் அவரை சுற்றி வளைத்து விசாரித்தனர். அப்போது, ராமர் நகையை வாயில் போட்டு விழுங்கி விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து உடனடியாக பாளையங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். பின்னர் ராமருக்கு இனிமா' மருந்து கொடுத்து 5 பவுன் நகையை வெளியே எடுத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி ராமரை கைது செய்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com