குற்ற செயல்களை கையாள்வதில் பெண் போலீஸ் அதிகாரிகளின் பங்களிப்பு எப்படி? - சென்னை ஐ.ஐ.டி. ஆய்வறிக்கை

பெண் போலீஸ் அதிகாரிகள் தங்கள் அக்கறையான அணுகுமுறையின் மூலம் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.
கோப்புப்படம்
Published on

சென்னை,

பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களை கையாள்வதில் பெண் போலீஸ் அதிகாரிகளின் பங்களிப்பு எப்படி இருக்கிறது? என்பது தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி. தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து ஆய்வு நடத்தின.

இந்த ஆய்வு கட்டுரையை ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியும், சென்னை ஐ.ஐ.டி.யின் மேலாண்மை ஆய்வுகள் மற்றும் தரவு அறிவியல் மற்றும் ஏ.ஐ. துறைகளின் பேராசிரியருமான கந்தசாமி பரமசிவன், பெங்களூரு டி.ஏ.பாய் மேலாண்மை கல்வி நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் தங்கத்தூர் சுகுமார் ஹரிஹரன், லக்னோ ஐ.ஐ.எம்.யை சேர்ந்த டாக்டர் நபிலா கான், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை சேர்ந்த எஸ்.தேஜஸ்வின் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகள் குறித்து கந்தசாமி பரமசிவன் கூறும்போது, "காவல்துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது, பாலின அடிப்படையிலான குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிறுவன ரீதியான செயலாற்றலை மேம்படுத்துகிறது என்றும், பாதிக்கப்பட்டவர்களிடையே அதிக நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் புகாரளிக்கும் விகிதத்தை அதிகரிக்க ஊக்குவிக்கிறது என்றும் நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

மேலும், பெண் போலீஸ் அதிகாரிகள் தங்களின் பரிவு மற்றும் அக்கறையுடனான அணுகுமுறையின் மூலம், காவல்துறையின் நிறுவன கலாசாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com