

சென்னை,
நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 57 தமிழகப் பயணிகளில், 37 பேரின் நிலை என்னவென்று இதுவரை தெரியாமல் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 105 இந்தியர்கள் மாயமாகியுள்ள செய்தி மிகுந்த கவலையளிக்கிறது. குறிப்பாக, கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் சுற்றுலா சென்ற 57 தமிழகப் பயணிகளில், 37 பேரின் நிலை என்னவென்று இதுவரை தெரியாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எஞ்சிய 20 பேர் பாதுகாப்பாக இருப்பதாக வந்த செய்தி ஓரளவிற்கு ஆறுதல் அளித்தாலும், மற்றவர்களின் நிலை குறித்த அச்சம் நீடிக்கிறது.
மாயமான 105 இந்தியர்களும், எவ்வித பாதிப்புமின்றி நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். தவிப்பில் இருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த இக்கட்டான நேரத்தில் மன தைரியத்தை அளிக்கவும் வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.