

சென்னை,
கிராமிய கலைகளுக்கு கோவில்களில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கோவில் மேலாண்மைத் திட்டம், திருப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர், 'கோவில்களுக்கு சொந்தமான ரூ.112.95 கோடி மதிப்பிலான 105.14 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. கிராமத்தெய்வங்கள் எழுந்தருளியுள்ள கோவில் வளாகங்களில், பாரம்பரிய பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலாசாரம், இறை உணர்வு மற்றும் வாழ்வியல் மரபுகளுக்கு ஏற்ப, சட்டசபையில் அறிவித்தபடி கிராமிய கலைநிகழ்ச்சிகளை விரைவாக தொடங்கி நடத்தி அவற்றை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும்' என்றார். கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் டாக்டர் டி.ஜி.வினய், கூடுதல் கமிஷனர்கள் துரை ரவிச்சந்திரன், த.ரத்னா, பொ.ஜெயராமன் உள் ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.