ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

ஆதிதிராவிடர் விண்ணப்பதாரர்களுக்கு அல்லது இயக்குநர் குழு மற்றும் உறுப்பினர்களில் குறைந்தது 50 சதவீதம் ஆதிதிராவிடராக உள்ள வகை-2, வகை-3 விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஆதிதிராவிடர் விவசாயிகளுக்காக 10 மாவட்டங்களில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்: விலைப்புள்ளிகள் வரவேற்பு
Published on: 

சென்னை,

தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும் தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, மாநிலத்தின் 10 முக்கிய மாவட்டங்களில் ஆதிதிராவிடர் விவசாயிகளுக்காக புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPO) உருவாக்கப்படவுள்ளன. இது தொடர்பாக ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;-

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்

ஆதிதிராவிடர் நல இயக்குநரகம், 2026-2027ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு எண்49-இன்படி, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திருவள்ளூர், திண்டுக்கல் மற்றும் தருமபுரி ஆகிய பத்து மாவட்டங்களில், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்காக பத்து உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் / நிறுவனங்கள் (FPO / FPC) உருவாக்கி, பதிவு செய்து, வலுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான விலைப்புள்ளிகள் தகுதியுள்ள முகமைகள், நிறுவனங்கள், ஆலோசகர்கள் மற்றும் தனிநபர் வல்லுநர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

தகுதி மற்றும் அனுபவ விவரங்கள்

· வகை-1 (தனிநபர் ஆலோசகர்)

விண்ணப்பதாரர் நிறுவன செயலர், பட்டய கணக்காளர் அல்லது வேளாண் வணிக வல்லுநராக இருக்க வேண்டும். அவர் குறைந்தபட்சம் மூன்று FPO / FPC-களை உருவாக்கிப்பதிவு செய்திருக்க வேண்டும் என்பதுடன், அந்த அமைப்பு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டு வர வேண்டும்.

· வகை-2 (நிறுவனம் / முகமை / அரசு சாரா நிறுவனம் / தணிக்கை நிறுவனம்)

விண்ணப்பதாரர் FPO / FPC உருவாக்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் மூன்று FPO / FPC-களைப்பதிவு செய்து, அவை மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டு வர வேண்டும்.

· வகை-3 (பதிவு செய்யப்பட்ட FPO / FPC)

விண்ணப்பதாரர் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இருந்து, மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வர வேண்டும். மேலும், ஏற்றுமதி மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் (Digital Marketing) / மின்வணிகம் (e-Commerce) ஆகியவற்றில் ஈடுபட்டு வருவதற்கான சான்றுடன் கூடிய வெற்றிகரமான வணிகச் செயல்பாட்டுப் பதிவு இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் விண்ணப்பதாரர்களுக்கு அல்லது இயக்குநர் குழு மற்றும் உறுப்பினர்களில் குறைந்தது 50 சதவீதம் ஆதிதிராவிடராக உள்ள வகை-2, வகை-3 விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ள தனிநபர்கள், முகமைகள் மற்றும் நிறுவனங்கள் விலைப்புள்ளி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தங்களது விலைப்புள்ளிகளின் அச்சு பிரதியை (Hard Copy) மூடிய உறையில் "இயக்குநர், ஆதிதிராவிடர் நல இயக்குநரகம், எழிலகம், சென்னை - 05" என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி

மேலும், இதன் மென் பிரதியை (Soft Copy) adw.director@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 10.11.2026 அன்று மாலை 5.30 மணிக்குள் வந்துசேரும் வகையில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி திட்டம் தொடர்பான முழுமையான விவரங்களை https://www.tnadw.tn.gov.in/ என்ற ஆதிதிராவிடர் நலத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அணுகிப் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X