1 லட்சம் டன் பெட்ரோலை ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்த இந்தியா

ரஷியாவின் உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
1 லட்சம் டன் பெட்ரோலை ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்த இந்தியா
Published on

புதுடெல்லி,

9 லட்சம் பீப்பாய்களில் 1 லட்சம் டன் பெட்ரோலை ரஷியா வுக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது. உலக பொருளாதார தடைக்கு மத்தியில் இது ரஷிய எல்லையை சென்றடைந்தது.

4 ஆண்டுகால போர்

உக்ரைன், ரஷியா இடையே 4 ஆண்டுகளுக்கு மேலாக போர் தாக்குதல் நீடித்து வருகிறது. உக்ரைன் நடத்திய தொடர் டிரோன் தாக்குதல்கள் காரணமாக, ரஷியாவின் உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அந்த நாட்டின் அரசு சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டதால், நாட்டில் எரிபொருள் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. இது மீண்டும் பழைய நிலைக்கு வர 6 மாதங்கள் வரை ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பெட்ரோல் தட்டுப்பாடு

இதனால் வரலாற்றில் முதல்முறையாக ரஷியா, இந்தியாவிலிருந்து கடல் வழியாக பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. பொதுவாக ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்கும் நிலையில், தற்போது ரஷியா தனது நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வாங்கும் ஒரு அரிய தலை கீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

உலகளவில் ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான இங்கிலாந்து. பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இத்தகைய சூழலுக்கு மத்தியில் இந்தியா ரஷியாவுக்கு ரகசியமாக பெட்ரோலை ஏற்றுமதி செய்தது.

9 லட்சம் பீப்பாய்கள்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நயாரா எனர்ஜி நிறுவனத்தின் வாடினார் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எகிப்து வழியாக ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருளை மாற்றி, ரகசியக் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. கப்பல் போக்குவரத்துத் தரவுகளின்படி, முதற்கட்டமாக 42 ஆயிரம் டன் பெட்ரோல் அடங்கிய முதல் கப்பல் ரஷியாவைச் சென்றடைந்தது.

அதைத் தொடர்ந்து மற்றொரு கப்பல் மூலம் 68 ஆயிரம் டன் பெட்ரோல் ரஷியாவின் ஆர்க் டிக் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மொத்தம் 9 லட்சம் பீப்பாய்கள் மூலமாக மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரம் டன் பெட்ரோல் இந்தியாவில் இருந்து ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஏற்கனவே ரஷியாவுடன் 80 ஆண்டுகால வெளியுறவு கொண்டாட்டத்தில் திளைக்கும் இந்தியாவின் நட்புறவுக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com