நாகர்கோவிலில் மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: ஆய்வாளர் கைது

கன்னியாகுமரி மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்டம், நல்லூரை சேர்ந்த கதிரவன் என்பவர் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
நாகர்கோவிலில் மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: ஆய்வாளர் கைது
Published on

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரியில் உள்ள ரவிவர்மன் புதுத்தெருவில் கன்னியாகுமரி மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு திருப்பூர் மாவட்டம் நல்லூரை சேர்ந்த கதிரவன் (வயது 45) என்பவர் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இவரை பூதப்பாண்டியை சேர்ந்த ஹரிஹரன் சந்தித்து, திட்டுவிளையில் புதிதாக மருந்தகம் திறப்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உள்ளதாகவும், அதற்கு ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது கதிரவன் புதிய மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று கூறினாராம்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஹரிஹரன் இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அவரிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து கதிரவனிடம் கொடுக்குமாறு அறிவுரை கூறினர். இதனையடுத்து ஹரிஹரன் நேற்று மதியம் கதிரவனை தொடர்பு கொண்டு, தான் பணத்துடன் நாகர்கோவில், மணிமேடை சந்திப்பில் நிற்பதாகவும், அங்கு வந்து பணத்தை பெற்று செல்லுமாறும் கூறினார்.

கதிரவன் அங்கு வந்ததும் போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை கதிரவனிடம் அவர் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்கால், இன்ஸ்பெக்டர் சிவசங்கரி மற்றும் போலீசார், ஆய்வாளர் கதிரவனை கையும் களவுமாக பிடித்தனர்.

தொடர்ந்து அவரை போலீசார் வடசேரியில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை கைது செய்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com