

சென்னை,
தி.மு.க. முப்பெரும் விழாவில் 110 மாவட்ட பொறுப்பாளர்களையும் அறிமுகம் செய்ய, கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்விக்கு காரணங்கள் குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், தி.மு.க.வை வலுப்படுத்த 77 ஆக இருந்த மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்த கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.
அதன்படி, நேற்று கட்சி ரீதியாக தி.மு.க.வில் பிரிக்கப்பட்ட 110 மாவட்டங்கள் எவை? என்பதும், அதில் என்னென்ன சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன? என்பதுவும் வெளியானது.
தற்போதுள்ள 77 மாவட்ட செயலாளர்கள், புதிதாக உதயமாகும் 110 மாவட்டங்களில், எந்தெந்த ஒன்றியம், நகரம், பேரூர் பகுதிகள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து மாவட்ட செயற்குழுவை கூட்டி, அதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் கட்சித் தலைமைக்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுவாக, தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்கள், கட்சி தேர்தல் நடத்தியே நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கு முன்பாக குறிப்பிட்ட மாவட்டத்தை கவனிக்க பொறுப்பாளர்கள் தான் நியமிக்கப்படுவார்கள். தேர்தல் மூலம் மாவட்ட செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை பொறுப்பாளர்களே நிர்வகிப்பார்கள்.
அந்த வகையில், தி.மு.க.வில் புதிதாக உதயமாகியுள்ள 110 மாவட்டங்களுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்கள் அனைவரையும் செப்டம்பர் 17-ந் தேதி நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் அறிமுகம் செய்து வைக்க, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். முப்பெரும் விழா நடைபெறும் இடம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.