

சென்னை,
நிதி நெருக்கடிக்கு மத்தியில் புதிய தலைமைச் செயலகம் அவசியம் தானா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து விரிவாக இங்கே காண்போம்.
105 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சட்டசபை வரலாற்றில், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே மெட்ராஸ் மாகாணமாக இருந்த நேரத்தில், 1921-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி, முதல் முறையாக புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டம் நடந்துள்ளது.
இடையில், செனட் ஹவுஸ் (1937-1938), ராஜாஜி அரங்கம் (1938-1939), கலைவாணர் அரங்கம் (1952-1956), அரன்மோர் அரண்மனை, ஊட்டி (1959 - 10 நாட்கள்), ஓமந்தூரார் அரசினர் தோட்டம் (2010-2011) (தற்போதைய அரசு பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டிடம்) ஆகிய இடங்களுக்கு இடம்மாறினாலும், 98 ஆண்டுகளாக தடம் மாறாமல் புனித ஜார்ஜ் கோட்டை அரங்கத்திலேயே சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, "நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்" என்று அவர் அறிவித்தார்.
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக பட்டினப்பாக்கம் போர் ஷோர் எஸ்டேட், கிண்டி நெருஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகம், கிண்டி ரேஸ்கோர்ஸ், நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு இடம் ஆகியவை பரிசீலனையில் இருந்து வருகின்றன.
இந்த நேரத்தில், ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமாக கடன் இருக்கும் சூழ்நிலையில் புதிய தலைமைச் செயலகம் அவசியம் தானா? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழலாம்.
தமிழ்நாட்டில் மக்கள்தொகைக்கு ஏற்ப தொகுதி வரையறை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
15 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போதுதான் தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற இருக்கிறது. மக்கள்தொகை 8 கோடியை கடந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 120 அதிகரிக்கும் என்று தெரிகிறது. அதாவது, 234 தொகுதிகள், 354 ஆக அதிகரிக்கும் நிலை உள்ளது.
புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தற்போதைய தமிழக சட்டசபை கூட்ட அரங்கத்தில், 234 சட்டமன்ற உறுப்பினர்களும் நெருக்கடியான நிலையிலேயே அமரவைக்கப்பட்டுள்ளனர். இதுபோக, சபாநாயகர் இருக்கைக்கு வலதுபுறம் அரசு அதிகாரிகள் இருக்கும் இடமும், இடதுபுறம் பத்திரிகையாளர்கள் இருக்கும் இடமும் விசாலமாக இல்லை.
எதிர்காலத்தில், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 354 ஆக உயரும்போது, தற்போதைய கூட்ட அரங்கம் நிச்சயம் போதாது. அந்த நேரத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான தேவை கண்டிப்பாக ஏற்படும்.
எனவே, அப்போதைய தேவையை கருத்தில் கொண்டு, இப்போதே புதிய தலைமைச் செயலகம் கட்டிடம் கட்டுவது என்பது தேவையான ஒன்றுதான். தமிழக அரசின் கீழ் 55 துறைகள் இருக்கின்றன. இதற்கான அலுவலகங்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை, மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலைக்கு எதிரே உள்ள எழிலகம் கட்டிடம், சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை ஆகிய இடங்களில் பிரிந்து கிடக்கின்றன. இதனை ஒரே இடத்தில் ஒருங்கிணைப்பது நிர்வாக வசதிக்கு ஏதுவாக இருக்கும்.
ஆனால், 2006-2011-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த தி.மு.க. அரசு, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டிடத்தை கட்டி, சுமார் ஓராண்டு காலம் (2010-2011) அந்த கட்டிடத்திலேயே சட்டசபை கூட்டத்தையும் நடத்தியது.
ஆனால், 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தில் வந்த அ.தி.மு.க. அரசு, புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை, பன்நோக்கு அரசு சிறப்பு மருத்துவமனையாக மாற்றிவிட்டு, மீண்டும் தற்போதைய இடத்திற்கே சட்டசபையை மாற்றியது.
எனவே, புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, புதிதாக அமைக்க இருக்கும் தலைமைச் செயலக கட்டிடத்தையாவது அரசியல் காரணங்களுக்காக எதிர்காலத்தில் மாற்றியமைக்காத வகையில், கட்டிய இடத்திலேயே தொடர சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மற்றொரு பக்கம், கிண்டியில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையை மேலும் தரம் உயர்த்தி, ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள், பணியாளர்கள், நோயாளிகளை அங்கு மாற்றிவிட்டு, மீண்டும் அதே கட்டிடத்தை தலைமைச் செயலகமாக மாற்றலாம் என்ற கோரிக்கையும் எழுகிறது.