

சென்னை,
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தயாரா சி.எம். சார் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், அந்த மாவட்ட பெண் ஆட்சியர் இல்லத்திற்கு இரவு நேரத்தில் குடி போதையில் சென்று பாலியல் தொல்லையும், செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் சீண்டலும் தொடர்ந்து செய்து வந்ததை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஜூலை 31-ம் தேதியே அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
ஆனால் அதன் பின்பும் சுமார் 4 மாத காலம் முதல்-அமைச்சர், தலைமைச்செயலாளர், உள்துறைசெயலர் மற்றும் டி.ஜி.பி. உள்பட அனைவரும் இந்த சம்பவத்தை மூடி மறைத்ததோடு, சட்ட அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெறவில்லை என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். பொறுப்புள்ள மாவட்ட ஆட்சியரை மன வேதனையடையச் செய்தது வெட்கக்கேடானது சி.எம். சார்.
தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து அவரை, தொடர்ந்து 4 மாத காலம் பாதுகாக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் செயல்பட்டு வந்த முதல்-அமைச்சர், சட்ட அமைச்சர், தலைமை செயலாளர், உள்துறை செயலர் மற்றும் காவல்துறை தலைவர் உள்பட மேற்படி குற்றசம்பவத்திற்கு அனைவருமே காரணமாக இருந்தது உறுதி ஆகியுள்ளது. இந்த சூழலில் மீண்டும் உங்கள் தலைமையில் இருக்கின்ற காவல்துறை மூலம் நியாயம் கிடைக்குமா..?
எனவே இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தயாரா சி.எம். சார்..? உங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அ,தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பதவியை ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் இடைத்தேர்தல் நடத்தி கொண்டிருக்கும் முதல்வரே! தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களான அருள் விக்னேஷ், சரவணன், துணை சபாநாயகர் ரவிசங்கர், அமைச்சர்களான கில்லி சரத், விஜய பாலாஜி, நிர்மல் குமார், ராஜ்மோகன், காந்திராஜ், ஜெகதீஸ்வரி, கீர்த்தனா இவர்கள் பதவியையும் ராஜினாமா செய்ய வைத்து உங்கள் கட்சியிலிருந்து விடுவித்து இடைத்தேர்தல் நடத்த உங்களின் தூய ஆட்சி முன்வருமா சி.எம். சார்?..
இவ்வாறு அவர் சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார்.