

சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை அண்ணாசாலையிலுள்ள மின்சார வாரிய (TNEB) தலைமையகத்திலிருந்து டெண்டர்கள் மற்றும் நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கிய கோப்புகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. புதிய மின்சாரத்துறை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்ட சில நாட்களிலேயே, இந்தத் துணிச்சலான திருட்டு அரங்கேறியிருப்பது, துறை அதிகாரிகளின் துணையோடுதான் இது நடந்திருக்குமோ என்ற பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மின்சாரத்துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற டெண்டர் முறைகேடுகள், குறிப்பாக ரூ. 397 கோடி மதிப்பிலான டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், முக்கிய ஆதாரங்களைக் களவுபோகவிட்டு, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பெரும் லஞ்ச ஊழல்களையும் முறைகேடுகளையும் மூடிமறைக்கவும், அவர்களைக் காப்பாற்றவும் தற்போதைய தவெக அரசு முயல்கிறதா என்ற நியாயமான கேள்வி எழுகிறது.
எனவே, இந்த விவகாரத்தில் காவல்துறை உடனடியாக நேர்மையான விசாரணை நடத்தி, காணாமல்போன ஹார்ட் டிஸ்க்குகளை மீட்பதோடு, இதற்குப் பின்னணியில் இருக்கும் அதிகாரிகளையும், அரசியல் நபர்களையும் கண்டறிந்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.