

சென்னை,
"பெண்கள் இல்லாத ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை நினைத்துப் பார்க்க முடியாது" என்று பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பெண்கள் இல்லாமல் ஆர்.எஸ்.எஸ். இல்லை
சிவசக்தியை நடைமுறையில் செயல்படுத்தி வரும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். நேற்று (20.10.2026) விஜயதசமி. ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்ட நாள். கடந்த ஓராண்டாக இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் அமைந்துள்ள, ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விஜயதசமி விழாவில், அதன் தலைவர் மோகன் பாகவத் ஆற்றி உரை நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தேச பக்தர்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் இருந்த அவரது உரையின், நாடு எதிர்கொண்டுள்ள பிரச்னைகள், சவால்களையும், அதற்கான தீர்வுகளையும் எடுத்துரைத்தார். நாக்பூரில் நடைபெற்ற நூற்றாண்டு ஆண்டு ஸ்ரீ விஜயதசமி விழாவின் போது, பரம பூஜ்ய சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பகவத் ஜி மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார். தேசத்தை வலுப்படுத்துதல், மக்களுக்கு சேவையாற்றுதல் ஆகிய இரண்டும் தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கிய நோக்கம் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார். ஆனால், இந்தியாவின் ஆன்மிக, தேசிய கலாசாரத்தில் முற்றிலும் நம்பிக்கையில்லாததோடு, அதை அழிக்க வேண்டும் என்ற முனைப்பில், நூற்றாண்டை கடந்து வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீது புழுதிவாரி தூற்றியிருக்கிறார்.
"ஆர்.எஸ்.எஸ். என்பது ஆண்களை மட்டுமே கொண்ட, அரசியலமைப்புக்கு எதிரான ஒரு பிரிவு. இது பெண்களை ஆண்களின் சொத்து என்று நம்புகிறது. நான் சிவ-சக்தியை நம்புகிறேன். அதனால்தான், அவர்களுக்கு எதிராகப் போராடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இதில் அழகான விஷயம் என்னவென்றால், அவர்களது அமைப்பைச் சேர்ந்த பல பெண்களே என் பக்கம் இருக்கிறார்கள்" என புலம்பியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்ஸின் அன்றாட செயல்திட்டங்கள் காரணமாக, தினசரி கூடுதலான ஷாகா, பயிற்சி முகாம்கள் ஆண்களுக்கு தனியாக நடத்தப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே பெண்களுக்காக ராஷ்ட்ர சேவிகா சமிதி என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்ஸில் ஆண்களுக்கு என்ன பயிற்சி, என்ன நடைமுறை உள்ளதோ அவை அனைத்தும், ராஷ்ட்ர சேவிகா சமிதி மூலம் பெண்களுக்கும் கிடைக்கிறது.
ஆர்எஸ்எஸ் பொறுப்புகளில் பெண்கள் இல்லாவிட்டாலும், அதன் நடைமுறைகளின்படி பெண்கள் தான் அந்த அமைப்பின் அச்சாணியாக இருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ்ஸின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெண்கள், ஆண்களுக்கு நிகராக, சில நிகழ்வுகளில் ஆண்களை விட அதிகமாகவே இருப்பார்கள். ஆர்.எஸ்.எஸ்ஸின் பெரும்பாலான கூட்டங்கள் வீடுகளில்தான் நடக்கும். பெண்களின் ஆதரவும், உதவியும் இல்லாமல் வீடுகளில் எப்படி கூட்டம் நடத்த முடியும்? சிவசக்தியை நடைமுறையில் செயல்படுத்தி வரும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ்., கோவை மாவட்டத்தில் சிறு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த நான் கல்லூரி காலத்திலேயே அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பில் இணைந்தேன். நான் மாணவர் அமை்பில் பல்வேறு பொறுப்புகளில் செயல்படவும், அதன்பின் அரசியல் களத்திற்கு வரவும் ஆர்.எஸ்.எஸ். தந்த ஊக்கமே காரணம். எனவே, ஆர்.எஸ்.எஸ்ஸை நோக்கி, சிவசக்தி பாடம் எடுப்பது, கொல்லன் தெருவில் ஊசி விற்பதற்கு சமம் என்பது ராகுல் காந்தி உணர வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த பெண்கள் அல்ல, இந்திய தேசத்தை, இந்திய மண்ணின் ஆன்மிக, தேசியத்தை நேசிக்கும் எந்தப் பெண்ணும், ராகுல் காந்தியின் இந்திய, தேசிய விரோதக் கொள்கையை ஆதரிக்க மாட்டார்கள். அதனால்தான், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.