முதல்-அமைச்சர் விஜய்யுடன் ஐ.யு.எம்.எல் தலைவர் காதர் மொகிதீன் சந்திப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் விஜய்யை இன்று சந்தித்து பேசினர்.
முதல்-அமைச்சர் விஜய்யுடன் ஐ.யு.எம்.எல் தலைவர் காதர் மொகிதீன் சந்திப்பு
Published on

சென்னை,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் ஷாஜஹான், மாநில துணைத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ்கனி, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான், மாநில செயலாளர் ஹெச். அப்துல் பாசித் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை இன்று சந்தித்தனர்.

அப்போது தமிழ்நாடு அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரையும் இணைத்துக் கொண்டு, பணியாற்றக் கூடிய வாய்ப்பு அளித்து கண்ணியப்படுத்தியமைக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்திய முஸ்லிம்களின் தனிபெரும் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் 131-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு அரசு சார்பில் நாளை (05-06-2026) காலை 9 மணியளவில் காயிதே மில்லத் அடக்கதலம் அமைந்துள்ள சென்னை திருவல்லிக்கேணி காயிதே மில்லத் நெடுஞ்சாலையில் உள்ள வாலாஜா மஸ்ஜித் வளாகத்தில் நடைபெறுகின்றது. இவ்விழாவில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்றுக் கொண்டு விழாவில் கலந்து கொள்வதாக முதல்-அமைச்சர் விஜய் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும் இந்த சந்திப்பின்போது, தமிழக முஸ்லிம் சமுதாய மக்களின் முக்கிய கோரிக்கைகள் தொடர்பான மனு ஒன்றை அளித்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர். கோரிக்கைகளின் விவரம் வருமாறு:-

காலம் காலமாக பயன்பாட்டில் உள்ள வக்பு சொத்துகளை காப்பாற்ற, பட்டா இல்லாத பள்ளி வாசல்கள், கபரஸ்தான்கள், தர்காக்கள், ஆஷுர்கானா, மத்ரஸா, அனாதை இல்லங்களுக்கு உடனடியாக பட்டா வழங்கி, உமீத் போர்ட்டலில் பதிவு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி, வக்பு சொத்துகளை காப்பாற்றித் தர வேண்டும்.

மத வழிபாட்டு தலங்கள் புதிதாக கட்டுவதற்கும், புதுப்பிப்பதற்கும் உள்ள அனுமதிக்கான தடங்கல்களை நீக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டின் அளவை 3.5 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக உயர்த்தி தர வேண்டும். இடஒதுக்கீட்டின் பலன் அனைத்து துறைகளிலும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு அறிவித்தபடி மதுரை மற்றும் கோவையில் வக்பு தீர்ப்பாயம் மிக விரைவாக அமைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் முஸ்லிம்களுக்கான அடக்கத் தலங்கள் என்ற கபரஸ்தான்கள் அமைக்க அரசு இடம் ஒதுக்கி தர வேண்டும்.

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு கருணை காட்டி அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இந்த விடுதலை உத்தரவு தாமதமாகும் பட்சத்தில் அதுவரை அவர்களுக்கு பரோல் விடுப்பு வழங்க வேண்டும்.

திருப்பரங்குன்றத்தில் நல்லிணக்கம் நிலைக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறையை மக்கள் தொகை அடிப்டையில் மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு நிரந்தர தலைமை செயல் அலுவலரை உடனடியாக நியமிக்க வேண்டும்.

தமிழ்நாடு சிறுபான்மையின நலத்துறைக்கு கடந்த காலங்களைவிட இரட்டிப்பாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com