கள்ளழகர் கோவில் ராஜகோபுரத்துக்கு நாளை கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜைகள் தொடங்கின

நாளை காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் ராஜகோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் விமரிசையாக நடக்கிறது.
கள்ளழகர் கோவில் ராஜகோபுரத்துக்கு நாளை கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜைகள் தொடங்கின
Published on

அழகர்கோவில்,

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் ராஜகோபுரத்துக்கு திருப்பணிகள் சுமார் ரூ.2 கோடி திட்ட மதிப்பீட்டில் நடைபெற்று, வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் கோபுரம் காட்சி தருகிறது.

சுமார் 120 அடி உயரம் கொண்ட இந்த ராஜகோபுரமானது, 7 நிலைகளை கொண்டது. 6 அடி உயரம் கொண்ட 7 கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளன. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கும்பாபிஷேகத்துக்காக அங்குள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று காலை 9 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜையுடன், யாக சாலை பூஜைகள் தொடங்கின.

மூலவர் சன்னதியில் பூஜை செய்யப்பட்ட நூபுர கங்கை தீர்த்தக்குடங்கள் மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டன. கோவில் யானை சுந்தரவல்லி முன்னே செல்ல பட்டர்கள் ஊர்வலமாக யாகசாலைக்கு தீர்த்தக்குடங்களை எடுத்து வந்தனர்.

யாகசாலையில் 8 யாக குண்டங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தன. அங்கு 160 புனித தீர்த்த கலசங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் கள்ளழகர் கோவில் சுந்தர நாராயண அம்பி பட்டர் தலைமையில் 40 பட்டர்கள் கலந்து கொண்டு மாலை 5 மணிக்கு யாகசாலை பூஜைகளை தொடங்கினர். வேத மந்திரங்கள் ஒலிக்க பூஜைகள் நடந்தன.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) 2-வது நாள் யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன. நாளை(வியாழக்கிழமை) காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் ராஜகோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் விமரிசையாக நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com