கொசஸ்தலை ஆற்றையும் எண்ணூர் கழிமுகத்தையும் மீட்டெடுக்க வேண்டும் - சீமான்

குற்றமிழைத்த தொழிற்சாலைகள் மீது சட்டப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்து, உடனடியாக அவற்றின் செயல்பாடுகளை முடக்க வேண்டும்.
கொசஸ்தலை ஆற்றையும் எண்ணூர் கழிமுகத்தையும் மீட்டெடுக்க வேண்டும் - சீமான்
Published on

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

எண்ணூர் கழிமுகத்திலும் கொசஸ்தலை ஆற்றிலும் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கும் சம்பவம் வெறும் சுற்றுச்சூழல் பேரழிவு மட்டுமல்ல, எளிய மீனவ மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான நேரடி தாக்குதலாகும்.

சுற்றுச்சூழல் பேரிடர்

இதுவரை கண்டிராத மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரிடராக, எண்ணூர் கழிமுகத்திலும் கொசஸ்தலை ஆற்றிலும் இன்று 16.08.2026, டன் கணக்கில் மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் செத்து மிதந்து கரை ஒதுங்கி வரும் சீரழிவு நடந்தேறியுள்ளது. இந்த நச்சு மாசுபாட்டால் தங்களின் வாழ்வாதாரமே ஒட்டுமொத்தமாக அழிந்துபோன நிலையில், சம்பவம் நடந்து இத்தனை மணி நேரமாகியும் எந்தவொரு அரசு அதிகாரியோ அல்லது ஆட்சியாளர்களோ தங்களை நேரில் வந்து சந்திக்காதது அப்பகுதி மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள், உடனடியாக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாழங்குப்பம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிய இழப்பீடு

காலம் காலமாக அனல்மின் நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் நச்சுக் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கலக்கப்பட்டு, அந்நிலப்பரப்பே சீரழிக்கப்பட்டு வருகிறது. தற்போது வேதிப்பொருள் கழிவுகளால் பல்லாயிரக்கணக்கான மீன்களும், நண்டு, இறால் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களும் செத்து மடிந்து மிதப்பது அப்பகுதி மக்களின் வாழ்வையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இவ்வளவு பெரிய சூழலியல் சீரழிவு தொடர்ந்து நடப்பதற்கு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில Pollution Control Board (TNPCB) அமைப்பின் அலட்சியமும், போலி கண்காணிப்புமே முதன்மை காரணம். தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை நாசமாக்கும் நிறுவனங்களைக் கண்டறிந்து தண்டிப்பதற்குப் பதிலாக, பெரு நிறுவனங்களுக்கு துணைபோகும் கடந்த திமுக அதிமுக ஆட்சியாளர்களின் போக்கையே தற்போதைய தவெக அரசும் பின்பற்றுவது மாற்றம் என்று வாக்களித்த மக்களுக்கு செய்யும் அநீதியாகும். குற்றமிழைத்த தொழிற்சாலைகள் மீது சட்டப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்து, உடனடியாக அவற்றின் செயல்பாடுகளை முடக்க வேண்டும். அத்துடன், பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை அந்த நச்சு நிறுவனங்களிடமிருந்தே பெற்றுத்தர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'வளர்ச்சி' என்ற பெயரில் சுற்றுச்சூழல் விதிகளையும், கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளையும் தளர்த்தி, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆற்றுப்படுகைகளையும் கழிமுகங்களையும் நச்சுக் கிடங்காக மாற்ற மத்திய பாஜக அரசு வழிவகுத்துள்ளது. மாநிலத்தின் இயற்கை வளங்களையும், பூர்வகுடி மக்களின் வாழ்வுரிமையையும் பலியிடும் இந்தச் சுற்றுச்சூழல் துரோகத்தை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மத்திய, மாநில அரசுகள் இனியும் வேடிக்கை பார்க்காமல், கொசஸ்தலை ஆற்றையும் எண்ணூர் கழிமுகத்தையும் மீட்டெடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணூர் கழிமுக மாசுபாட்டால் வாழ்வாதாரமிழந்து தாழங்குப்பம் நெடுஞ்சாலையில் நீதிக்காகப் போராடி வரும் மீனவ கிராம மக்களின் அறவழிப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதோடு, பாதிக்கப்பட்ட எளிய மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் வரை இந்த அறப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தோளோடு தோள் நின்று இறுதிவரை களமாடும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com