

திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான லட்சக் கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
குறிப்பாக பவுர்ணமி போன்ற நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த மாதத்திற்கான (ஐப்பசி) பவுர்ணமி இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 11.25 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 10.09 மணி அளவில் நிறைவடைகிறது.
இந்தநிலையில், ஐப்பசி மாதப் பௌர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனைத் தரிசிக்க அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர். கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காகப் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பௌர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது சிறப்பானதாகக் கருதப்படுவதால், ஐப்பசி மாத பெளர்ணமியை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலைச் சுற்றி லட்சக் கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் தலைமையிலான போலீசார் தொடர்ந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.