திருவண்ணாமலை மகா தீபத்தின் போது பக்தர்களுக்கு மலையேற அனுமதி அளிக்கப்படுமா? - வல்லுநர் குழு ஆய்வு

திருவண்ணாமலையில் வருகிற 13-ம் தேதி 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சனிக்கிழமை காலை தொடங்கி மறுநாள் இரவு வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இந்த மழையானது, மலையையே அசைக்கும் அளவுக்கு வெளுத்து வாங்கியது. இதனால் அண்ணாமலையார் மலையில் வ.உ.சி.நகர் பகுதிக்கு மேலே உள்ள ராட்சத பாறைகள் திடீரென பயங்கர சத்தத்துடன் உருண்டு கீழ்நோக்கி வந்தன.

அதன் காரணமாக பாறைக்கு கீழே உள்ள மண் பெயர்ந்து அருவிபோல ஆக்ரோஷமாக வ.உ.சி.நகர் வீடுகளை நோக்கி பொலபொலவென சரிந்ததில் 2 வீடுகளுக்குள் புகுந்து அந்த வீடுகளே மண்ணுக்குள் புதைந்தன. அப்போது ஒரு வீட்டில் இருந்தவர்கள் வெளியேறி விட்டனர். மற்றொரு வீடு கண் இமைக்கும் நேரத்தில் மண் சரிவில் சிக்கியது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் கொப்பரை வைக்கும் இடத்தில் 400 அடிக்கு மண்சரிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அரைமலை பகுதியில் இருந்து சுமார் 600 அடிக்கு கீழ் இந்த சரிவு ஏற்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இந்த ஆண்டிற்காக பரணி தீபம் வரும் 13-ம் தேதி அதிகாலையும், மாலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த நிலையில் சுரங்கத்துறை ஆணையர் சரவணன் வேல்சாமி தலைமையில் 9 பேர் கொண்ட குழு திருவண்ணாமலை மீது ஏறி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த குழுவில் மண் இயக்கவியல் அடித்தள பொறியியல்துறை, சுரங்கத்துறை உள்ளிட்ட வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த வல்லுநர்கள் குழு திருவண்ணாமலை தீபமலையின் மண்ணின் தன்மையை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள். ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், மகா தீபத்தன்று பக்தர்களை மலை மீது அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com